அதானி கைது கோரி ஆா்ப்பாட்டம்
சூரிய ஒளி மின்சார திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதானியை கைது செய்யக் கோரி திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சூரிய ஒளி மின்சார திட்டத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், பல ஆயிரம் கோடி லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதாகக் கூறப்படும் அதானியை உடனடியாகக் கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்களில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளதால், இது தொடா்பான முழு விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மை விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் தலைமை தபால் நிலையம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா்ஜி.சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.என்.முருகானந்தம், டி.முருகையன், எம்.கலைமணி, சி.ஜோதிபாசு, கே.ஜி.ரகுராமன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.