ஜோ பைடனைப் போல பிரதமர் மோடி நினைவை இழந்து வருகிறார்: ராகுல் காந்தி
அதிகளவில் வெளிநாடுகளுக்குக் குடிபெயரும் இந்தியர்கள்! - அறிக்கை சொல்வதென்ன?
ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் தங்களுடைய வெளிநாட்டு பயணத்தை தொடர்கிறார்கள். அதிலும் பெரும்பாலான நபர்களின் முதன்மை தேர்வாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற பணக்கார நாடுகள் உள்ளன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (Organization for Economic Cooperation and Development) உள்ள நாடுகள் வரலாற்று ரீதியாக அவர்களுக்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளன.
இது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற 30 க்கும் மேற்பட்ட நாடுகளை கொண்ட அமைப்பாகும். இந்த நாடுகளில் புதிய புலம் பெயர்ந்தவர்களாக, சர்வதேச மாணவர்களாக அல்லது குடியுரிமை பெற்றவர்களாக குடிபெயர்வதில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
'சர்வதேச குடியேற்ற பார்வை 2024' (The international Migration outlook 2024) என்ற அறிக்கை கடந்த வியாழன் அன்று பாரீஸில் வெளியிடப்பட்டது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டில் 5.6 லட்சம் இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 2021ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 35 சதவீதம் அதிகமாகும். இந்நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களில் 5.6 லட்சத்தோடு இந்தியா முதல் இடத்திலும், 3.2 லட்சத்தோடு சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த நாடுகளுக்கு புதிதாக புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் 6.4 சதவீதமும், சீனர்கள் 3.8% சதவீதமும் பங்களித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் 2.6 லட்சம் ரஷ்யர்கள் இந்த நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 139 சதவீதம் அதிகமாகும்.
இதனைத் தொடர்ந்து ரோமானியா, கொலம்பியா போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
2022-ம் ஆண்டில், இங்கிலாந்து 1.12 லட்சம் இந்தியர்களை வரவேற்றுள்ளது. இது 2021ல் இருந்ததை விட இரு மடங்கு அதிகமாகும். அதே நேரத்தில் 1.25 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 1.18 லட்சம் இந்தியர்கள் கனடாவிற்கு இடம் பெயர்ந்துள்ளனர், இது 2021-ல் இருந்ததை விட 8 சதவீதம் குறைவாகும்.
இந்த நாடுகளுக்கு இந்தியர்கள் பெரும்பாலும், முதன்மை விண்ணப்பதாரர்களாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களாகவோ அல்லது தொழிலாளராக செல்வதற்கான வழிகளிலோ குடிபெயர்ந்துள்ளனர்.
மேலும் 2022 ஆம் ஆண்டில் 1,90,299 இந்தியர்கள் இந்த நாடுகளில் குடியுரிமையை பெற்றுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 43 சதவீதம் அதிகமாகும். அதே வேளையில் கனடாவின் குடியுரிமையை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து, மொத்தம் 60 ஆயிரம் பேர் குடியுரிமை பெற்றுள்ளனர்.
மேலும் 2023 ல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அறிக்கை எதிர்பார்க்கிறது. இந்த OECD நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியா, மொரோக்கோ, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
கொரோனா பெரும் தொற்றுக்கு பிறகு அமெரிக்காவில், சீனர்களின் குடிபெயர்வு 37 சதவீதம் அதிகரித்து முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளது.
டிரம்பின் குடியுரிமை கொள்கைகளால், வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் குடியுரிமை, வேலை தொடர்பான விசாக்கள் போன்றவற்றை பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். மேலும் கனடாவானது அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய குடியேற்றத்தின் இலக்குகளில் குறிப்பிட்ட திட்டமிட்ட குறைப்பை சமீபத்தில் அறிவித்தது. இங்கிலாந்தும் ஊதிய வரம்பை உயர்த்துதல் மற்றும் ஆக்கிரமிப்பு பட்டியலை குறைத்தல் போன்ற பாதுகாப்புவாத கொள்கைகளை அறிவித்துள்ளது. இதனால் இந்த நாடுகளுக்கு செல்வதற்கான கதவுகள் இந்தியர்கள் உட்பட பலருக்கு அடைக்கப்பட்டு வருகின்றன.