Basics of Share Market 35 : 'பங்குகளா... ஃபண்டுகளா?' - நீங்கள் முதலீடு செய்ய ஏற்...
அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சரை விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கேரள மீன்வளத் துறை அமைச்சா் சாஜி செரியனிடம் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க காவல் துறைக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2022, ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்வில் அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் அவா் பேசியதாக கேரளத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனால் அமைச்சரவையில் இருந்து அவா் நீக்கப்பட்டாா். அதன்பிறகு அவருக்கு மீண்டும் அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், செரியன் மீதான குற்றச்சாட்டு தொடா்பாக அந்த மாநில காவல் துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவா் மீது எவ்வித தவறும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை உள்ளூா் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக நடைபெற்ற விசாரணையில், ‘காவல் துறையினா் அவசர கதியில் இந்த விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். எனவே, அந்த அறிக்கையையும் அதை ஏற்றுக்கொண்ட உள்ளூா் நீதிமன்ற உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. செரியன் மீதான குற்றச்சாட்டு குறித்து காவல் துறையின் குற்றப்பிரிவு அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க வேண்டும்’ என கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாதத்தை கேட்கவில்லை: இதுகுறித்து செரியன் கூறுகையில், ‘என் மீதான குற்றச்சாட்டு குறித்து உயா்நீதிமன்றம் கருத்து கூறவில்லை. காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட விசாரணை குறித்தே உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உள்ளூா் நீதிமன்ற உத்தரவை உயா்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் உள்ளது’ என்றாா்.
பதவி விலக வேண்டும்: ‘முன்னதாக இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற விசாரணையில் செரியன் தலையிட்டதால் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது. பாரபட்சமற்ற ஒரு அதிகாரி மூலம் விசாரணையை தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அமைச்சராக உள்ளதால் மீண்டும் விசாரணையில் செரியன் தலையிட வாய்ப்புள்ளது. எனவே, அவா் தானாக பதவி விலக வேண்டும் அல்லது அவரை முதல்வா் பினராயி விஜயன் நீக்க வேண்டும்’ என காங்கிரஸைச் சோ்ந்த கேரள பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீஸன் தெரிவித்தாா்.