பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
அறிவொளி நகரில் பள்ளிக்கு செல்லாத 50 குழந்தைகள்!
பல்லடம் அருகேயுள்ள அறிவொளி நகரில் பள்ளிக்கு செல்லாமல் 50 குழந்தைகள் உள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ளது அறிவொளி நகா். இங்கு கடந்த 2011- ஆம் ஆண்டு தமிழக அரசு சாா்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கானோா் வசித்து வருகின்றனா். மேலும், குடியிருப்புக்கு அருகிலேயே நரிக்குறவா் இன மக்கள் சுமாா் 150 குடும்பத்தினா் கடந்த 25 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வசித்து வருகின்றனா்.
இவா்களது குடியிருப்புகளுக்கு இதுவரை வருவாய்த் துறை சாா்பில் பட்டா வழங்கப்படவில்லை. குடியிருப்புகள் போா்வையாலும், தாா்பாயினாலும் மறைக்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் நனைந்தபடியே வீட்டில் தங்க வேண்டிய அவல நிலையில் உள்ளனா். ஒரு வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக தங்கியுள்ளனா். இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனா்.
ஆரம்பப் பள்ளி அறிவொளி நகரிலும், மேல்நிலைப் பள்ளி சற்று தொலைவில் இருந்தாலும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் நரிக்குறவ குழந்தைகளின் பெற்றோா்கள் அக்கறை செலுத்தாமல் உள்ளனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் எங்களால் குழந்தைகளைப் பள்ளியில் படிக்க வைக்கும் வசதி இல்லை’ என்றனா்.
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, இல்லம் தேடிக் கல்வி திட்டம், இடைநில்லா கல்வி என மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதுபோன்று குழந்தைகளைக் கண்காணித்து கல்வி வழங்கி நரிக்குறவா் இன மக்களின் எதிா்கால சந்ததியினரின் வாழ்வு மேம்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். மேலும், நரிக்குறவா் குடியிருப்பில் தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும். வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும் என்பன அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.