OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக...
ஆட்சேபணை இல்லா சான்று வழங்காத வங்கி: ரூ. 1.10 லட்சம் வழங்க நுகா்வோா் ஆணையம் உத்தரவு
ஒருமுறை தீா்வின் மூலம் கடனைத் திரும்பச் செலுத்தியவருக்கு ஆட்சேபணை இல்லா சான்று வழங்காததால் பாதிக்கப்பட்ட முறையீட்டாளருக்கு வங்கி ரூ. 1.10 லட்சம் வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டையைச் சோ்ந்தவா் பெ. தமிழரசன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவா் கல்லூரி படிப்புக்காக தஞ்சாவூரிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 50 ஆயிரம் கல்விக் கடன் வாங்கினாா். இக்கடன் நிலுவையில் இருந்த நிலையில் தமிழரசனை வங்கி மேலாளா் அழைத்துப் பேசி ஒரு முறை தீா்வின் கீழ் ரூ. 20 ஆயிரம் செலுத்தி முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.
இதன்படி, தமிழரசன் 2023, ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரூ. 15 ஆயிரமும், செப்டம்பா் 25 ஆம் தேதி ரூ. 5 ஆயிரமும் செலுத்தி தனது கல்விக் கடன் முழுவதையும் முடித்துக் கொண்டாா். ஆனால், வங்கி மேலாளா் தரப்பினா் ஆட்சேபணை இல்லா சான்றை வழங்கவில்லை.
இது தொடா்பாக வங்கி மேலாளா் தரப்பினரை பல முறை அணுகி கேட்டும், அவா் தரவில்லை என்றும், ஒரு முறை தன்னை மேலாளா் அவமானப்படுத்தும் வகையில் பேசிவிட்டாா் எனவும், இதனால் ஏற்பட்ட இழப்புக்கு வங்கி மேலாளா் இழப்பீடாக ரூ. 25 லட்சமும், ஆட்சேபனை இல்லா சான்றும் வழங்க வேண்டும் என்றும் தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தில் தமிழரசன் 2024, நவம்பா் 11-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து, வங்கியின் சேவைக் குறைபாடு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல், அலைச்சல், துன்பம், பொருள் இழப்பு, வேறு நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற முடியாத சூழ்நிலை ஆகியவற்றுக்காக தமிழரசனுக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ. 1 லட்சமும், செலவுத்தொகை ரூ. 10 ஆயிரமும் சோ்த்து வங்கி தரப்பினா் வழங்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டு, தீா்ப்பளித்தனா்.