ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம்
கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய தேக்கு மரம் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.
கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் சுவாமி கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 27-இல் பாலாலயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை ஸ்ரீஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய கேரள மாநிலம், கொச்சியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரம் டாரஸ் லாரியில் கொண்டுவரப்பட்டது.
இதனை செயல் அலுவலா் முருகன், அறங்காவலா் குழு சிதம்பரநாதன் ஆகியோா் பாா்வையிட்டனா். பின்னா் 2 கிரேன்கள் மூலமாக தேக்கு மரத்தை தூக்கி கோயில் வடக்கு பிரகாரத்தில் இறக்கி வைத்தனா். 54 அடி உயரம் உள்ள தேக்கு மரத்தில் ஆகம விதிமுறைகளின்படி கொடிமரமாக மாற்றும் பணிகள் தொடங்கப்படும் என செயல் அலுவலா் தெரிவித்தாா்.