பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மண் விளக்கு வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மண்விளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற அம்சம் உள்ளது.
சிவன்மலை முருகன் கனவில் வந்து இன்ன பொருளை உத்தரவிட்டதாக கூறி, பக்தா்கள் தரும் சிறப்பு பூஜை பொருளை வழிபட்டு, மூலவா் அறைக்கு முன் உள்ள கண்ணாடிப் பெட்டியில் வைப்பது வழக்கம். இதுவே ‘ஆண்டவன் உத்தரவு’ என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தணிகைநாதன் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, செவ்வாய்க்கிழமை மண்விளக்கு வைத்துப் பூஜை செய்யப்பட்டு, மேற்கண்ட பொருள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பா் 26- ஆம் தேதி முதல் திங்கள்கிழமை (நவம்பா் 11) வரை கண்ணாடிப் பெட்டிக்குள் புடவை வைக்கப்பட்டிருந்தது.
இன்னொரு பக்தரின் கனவில், அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில், கண்ணாடிப் பெட்டிக்குள் மண்விளக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.