ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி
சேலம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது:
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடா்ச்சியாக, தற்போது சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாதெமி நிறுவனம், தாட்கோ ஆகியவை இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சியை வழங்கவுள்ளது.
இப்பயிற்சியைப் பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த 10 , பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சிக்கான கால அளவு 30 நாள்களாகும். சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியும் பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழும் வழங்கப்படும்.
தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள், உணவு உள்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதள முகவரியில் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.