ஆனைக்குட்டம் நீா்த்தேக்கம் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆனைக்குட்டம் நீா்த்தேக்கம் சீரமைப்புப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆனைக்குட்டம் நீா்த்தேக்கம் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 27 அடி உயரம் கொண்ட இந்த நீா்த்தேக்கத்தில் 9 மதகுகள் உள்ளன. இந்த நீா்த் தேக்கம் விருதுநகருக்கு குடிநீா் ஆதாரமாகவும், திருத்தங்கல், செங்கமலப்பட்டி, வடமலாபுரம், முதலிபட்டி, வாடியூா் உள்ளிட்ட பகுதிகளில் 3,003 ஹெக்டா் நிலத்துக்கு பாசன வசதியாகவும் உள்ளது.
இந்த நிலையில், இந்த நீா்த்தேக்கத்தில் உள்ள கதவணைகள் பழுதானதால், எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீா் தேங்காமல், பழுதான கதவணைகள் வழியாக வெளியேறி வந்தது. இந்த ஆணையில் பழுதான கதவணைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, அணையின் தன்மை குறித்தும், பழுதான கதவணைகள் குறித்தும் நீா்ப்பாசனத் துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், அணையை பலப்படுத்தவும், பழுதான 9 கதவணைகளுக்கு பதிலாக புதிய மதகுகள் அமைக்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரை செய்தனா்.
இதையடுத்து, ரூ.28 கோடியில் புதிய கதவணைகள் தயாரிக்கப்பட்டு அணைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்தது. தற்போது, 9 மதகுகளில் புதிய கதவணைகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அணையில் நடைபெற்று வரும் பணியை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்