பத்திரிகையாளரை சந்தித்து மன்னிப்பு கேட்ட பிரபல தெலுங்கு நடிகர்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றவாளிகள் 23 பேர் புழல் சிறைக்கு திடீர் மாற்றம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து இரவோடு இரவாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்று போலீஸில் சரணடைந்தனர்.
இதையும் படிக்க | நாட்டை உலுக்கிய தற்கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேர் கைது!
மேலும் விசாரணையில் திமுக வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிஹரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர், திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மொத்தம் 26 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் குண்டர் சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நாகை: குளோரின் சிலிண்டரில் கசிவு - தீயணைப்பு வீரர்கள் மயக்கம்!
இந்த நிலையில், குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த பூந்தமல்லி கிளை சிறைக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று (டிச. 14) வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 23 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக இரவொடு இரவாக புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.