போப் பிரான்சிஸுக்கு ரிக் வேத நூலை பரிசளித்த இந்து மதத் தலைவர்!
திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து; விதிமுறைகள் பின்பற்றப்பட்டததா?- வி.ஏ.ஓ புகாரில் போலீஸார் விசாரணை
11திண்டுக்கல் சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனையில் நடந்த தீ விபத்து தொடர்பாக சீலப்பாடி கிராம நிர்வாக அலுவலர் ராமர் அளித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த புகாரில், "திண்டுக்கல் திருச்சி ரோட்டில் உள்ள சிட்டி மருத்துவமனை சுமார் 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 12-ம் தேதி இரவு 9 மணியளவில் சிட்டி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. உடனடியாக மருத்துவமனை சென்று பார்த்த போது அங்கு பொது மக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மருத்துவமனையில் பரவிவரும் தீயையும் மருத்துவமனையின் உள்ளே இருந்த நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களை வெளியேற்றி ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துக்கொண்டிருந்தனர்.
அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்த போது மருத்துவமனையின் வரவேற்பரையில் மேற்கு பகுதியில் உள்ள கம்யூட்டரில் மின்கசிவு ஏற்பட்டு, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் தீ பரவியதை அறிந்தேன். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீ பரவாமல் அணைத்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் உறவினர்களை வெளியேற்றியுள்ளனர்.
அப்போது மருத்துவமனை லிஃப்டில் இருந்தவர்களை மீட்கும்போது புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதில் தேனியைச் சேர்ந்த சுருளி(50), மனைவி சுப்புலெட்சுமி(45), திண்டுக்கல்லைச் சேர்ந்த மாரியம்மாள்(50), மகன் மணிமுருகன்(30), ராஜசேகர்(36), மகள் கோபிகா(6) ஆகியோர் இறந்துவிட்டனர்.
தீ விபத்தில் சிக்கிய 35 பேர் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தீ விபத்து குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர் புகாரின் அடிப்படையில் நடத்தப்படும் விசாரணை, தீயணைப்பு துறையினர் தரும் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் கூறியுள்ளார்.
சிட்டி மருத்துவமனை தீ விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "திண்டுக்கல் மட்டுமல்லாது தேனி, பழநி பகுதியைச் சேர்ந்தவர்கள் எலும்பு தொடர்பான சிகிச்சைக்கு இந்த மருத்துவமனைக்கு அதிகம் வந்து செல்கின்றனர். நகரில் உள்ள முக்கியமான மருத்துவமனையாக இருக்கிறது. முதல் தளத்தில் மட்டுமே தீப்பற்றியிருக்கிறது. இதில் ஏற்பட்ட புகைமூட்டம் தான் 4 தளங்களுக்கும் பரவியிருக்கிறது. எலும்பு தொடர்பான சிகிச்சையில் இருந்தவர்களால் விபத்தின்போது உடனடியாக வெளியேற முடியவில்லை.
இதுபோன்ற அவசரகாலத்தில் அவர்களுக்கென வசதியான வழியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மருத்துவமனையில் தானியங்கி தீ அணைப்பான்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்புத்துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்திருக்க வேண்டும். மின் இணைப்புகள், மின்சாதனங்களும் முறையாக மருத்துவமனை நிர்வாகம் பராமரித்திருக்க வேண்டும். இதுபோல தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என விசாரித்து விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கும்" என்றனர்.