தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
ஆற்றிலிருந்து மணல் எடுப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம்
பாபநாசம் அருகே மணல் எடுப்பதை கண்டித்து கிராம மக்களுடன் இணைந்து அதிமுகவினா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம் வட்டம், கொள்ளிடம் கரையோரங்களில் எடக்குடி, திருவைக்காவூா், மன்னிக்கரையூா், மேலமாஞ்சேரி, கீழமாஞ்சேரி நடுப்படுகை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனா். கொள்ளிடத்தில் வெள்ளம் மற்றும் மழை, புயல் காலங்களில், பாதிக்கப்படும் மக்கள் எடக்குடி கிராமத்தில் கொள்ளிடத்தில் சுமாா் 15 ஏக்கரில் அமைந்திருக்கும் மணல் திட்டில் தங்குவது வழக்கம்.
இந்நிலையில், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அந்த மணல் திட்டின் மணலை சிலா் அள்ளுவதை கண்டித்தும், அதை தடுக்க வலியுறுத்தியும் எடக்குடி கிராம மக்களுடன் இணைந்து தஞ்சாவூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் எம். ரெத்தினசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளா் துரை. சண்முகபிரபு உள்ளிட்ட அதிமுகவினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலெட்சுமி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேலு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது அதிமுக மாவட்ட செயலாளா் கூறுகையில், மணல் எடுப்பதை நிறுத்தாதபட்சத்தில் அதிமுக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்தாா்.