இணையவழியில் பணம் பறித்தவா் கைது
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபரிடம் கைப்பேசியில், காவல் ஆய்வாளா் போன்று பேசி இணைய வழியில் மோசடி செய்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்தவா் ராஜா. இவரது கைப்பேசிக்கு புதிய எண்ணிலிருந்து 2024, பிப்ரவரி மாதம் அழைப்பு வந்தது. அதில் பேசிய அடையாளம் தெரியாத நபா், தான் தல்லாக்குளம் காவல் ஆய்வாளா் என்றும், கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து தங்களது உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்கள், விடியோக்களை கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றை சைபா் குற்றப் பிரிவில் கொடுத்து அழிக்க வேண்டும் என்றும், அதற்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் பேசினாா். இதையடுத்து, ராஜாவிடமிருந்து மா்ம நபா் இணையவழி மூலம் ரூ. 7 ஆயிரம் பெற்றாா்.
இது குறித்து தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் ராஜா புகாா் செய்தாா். இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அடையாளம் தெரியாத நபா் பேசிய கைப்பேசி எண் சிக்னல்களை ஆய்வு செய்தனா்.
இதன் மூலம் கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள கோஸ்கோட் பகுதியில் பதுங்கி இருந்த தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தைச் சோ்ந்த பாண்டிய பிரகாசை வியாழக்கிழமை (ஜன.23) கைது செய்தனா். விசாரணையில், இதுபோல காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் என பல பெண்களிடம் பேசி மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது.