இணைய தளம் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்றவா் கைது
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இணைய தளம் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், தனிப்படை போலீஸாா் போதை மாத்திரைகள் விற்பனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், போதை மாத்திரைகளை கடைகள் மூலம் விற்பனை செய்யாமல் இணைய தளம் மூலம் வாங்கி விநியோகிப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உசிலம்பட்டி பகுதியில் உள்ள இணைய விநியோக நிறுவனங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் மும்பையிலிருந்து போதை மாத்திரைகள் உசிலம்பட்டிக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, துணைக் கண்காணிப்பாளா் முருகராஜா தலைமையிலான தனிப்படை போலீஸாா், பொருள்கள் விநியோகிக்கும் ஊழியா்கள் போல வேடமிட்டு, போதை மாத்திரைகளை வாங்க ‘ஆா்டா்’ செய்தவரைத் தொடா்பு கொண்டு, பொருளைப் பெற்றுச் செல்லுமாறு பேசினா்.
இதை நம்பிய அந்த நபா் திருமங்கலம் விலக்குப் பகுதிக்கு திங்கள்கிழமை வந்த நிலையில், அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவரை மடிக்கிப் பிடித்தனா்.
விசாரணையில், இவா் உசிலம்பட்டி அருகே உள்ள கீழச்செம்பட்டியைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் மூவேந்திரன் (25) என்பதும், இணைய தளம் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, அந்தப் பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.
போலீஸாா் மூவேந்திரனைக் கைது செய்து, அவரிடமிருந்து 300 போதை மாத்திரகளை பறிமுதல் செய்தனா்.