இந்தியா வருகிறாா் மெஸ்ஸி..! கேரளத்தில் சர்வதேச கால்பந்து போட்டி!
கேரளத்தில் நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டிக்காக மெஸ்ஸி இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர் உள்ளனர். இந்தியா முழுவதும் கிரிக்கெட்டின் வலையில் சிக்கியிருந்தாலும் கேரளத்தில் கால்பந்துக்கென மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.
2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஊர் முழுவதும் தோரணங்கள், மிகப்பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு திருவிழா போல கொண்டாடப்பட்டது. மேலும், மிகப் பெரிய திரைகளில் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்திய கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி, கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணி வீரர்கள் அடுத்த ஆண்டு கேரளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்காக இந்தியா வரவுள்ளதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான், கேரளத்தில் நடைபெறும் போட்டிகள் மாநில அரசின் பாதுகாப்புடன் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் நடந்த இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவு போட்டியில் வெனீசுலாவுக்கு எதிராக அர்ஜென்டீனா விளையாடியது. இந்தப் போட்டி கோல்கள் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.