இறுதிப் போட்டிக்கு தேர்வான மே.இ.தீ. அணி..! இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை!
இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் குற்றம்சாட்டினாா். இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், தயாநிதி மாறன் தொகுதி நிதியை முறையாகச் செலவிடவில்லை என நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே தோ்தல் பிரசாரத்தின்போது பேசியதாகவும், இது அவதூறாகாது என்பதால் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு எதிராக அரசு இணையதளங்களில் உள்ள தரவுகளின் அடிப்படையிலும், நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையிலுமே மனுதாரா் அவ்வாறு பேசினாா். மற்றபடி அவா் வேறு எந்த அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்றாா்.
பதிலுக்கு தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், தயாநிதி மாறன் தொடா்பான அந்தச் செய்திக்கு சம்பந்தப்பட்ட நாளிதழ் வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையில், தோ்தல் நேரத்தில் மனுதாரா் வேண்டுமென்றே தயாநிதி மாறன் மீது குற்றம்சாட்டி பேசியது அவதூறானது என வாதிட்டாா்.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் தயாநிதி மாறன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தாா்.