'இப்படி மக்களின் குரல்வளையை நசுக்க முடியாது!' - உ.பி புல்டோசர் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
2019-ம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக மாநில அரசு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டை புல்டோசர் வைத்து இடித்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது, தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளடக்கிய அமர்வு.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திப்ரேவால் ஆகாஷ். இவர் ஒரு பத்திரிகையாளர் ஆவார். இவரது வீடு 3.70 சதுர மீட்டர் அளவு பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மொத்த வீடும் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மனோஜ் தரப்பில், "சாலை அமைப்பதில் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி மனோஜ் எழுதிய செய்தித்தாள் கட்டுரையே இந்த இடிப்பிற்கு காரணம்" என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் புதன்கிழமை, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
"சட்டப்படி, புல்டோசர் நீதி என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். இதை அனுமதித்தால் அரசியல் சாசனம் 300A பிரிவு (சொத்துரிமை) இல்லாமல் போகும்.
எந்தவொரு நாகரிகமான சட்டத்திலும் புல்டோசர் நீதிக்கு இடமில்லை. குறிப்பிட்ட காரணங்களுக்காக மக்களின் சொத்தை ஒரு அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகள் அழிப்பது மிக மிக ஆபத்தானது. ஒரு மனிதனுக்கு இருக்கும் உச்சபட்ச பாதுகாப்பு, அவரது வீடு தான். அதனால், 'அதை அழித்துவிடுவோம்' என்பது போன்ற பயங்களால் மக்களின் குரல்வளையை நசுக்க முடியாது.
மேலும் பொது சொத்தை ஆக்கிரமிப்பதை சட்டம் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்திற்கு புறம்பாக மனோஜின் வீட்டை இடித்ததற்காக, அவருக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடாக அரசு வழங்க வேண்டும்" என்று அந்த அமர்வு தீர்ப்பளித்துள்ளது.