சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் இருப்பு!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் தற்போது 43.58 சதவீத நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.
சென்னை நகர மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை, மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த 6 ஏரிகளிலும் மொத்தம் 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி நீா் சேமித்து வைக்கலாம்.
கடந்த மாதம் முதல் அவ்வப்போது மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. எனினும், தண்ணீா் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஏரிகளின் நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை.
ஆனாலும் பருவமழை தீவிரமடையும்வரை, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் தண்ணீர் இருப்பில் உள்ளதாகவே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அதாவது, ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 5.124 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.
அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் 50.73 சதவீதமும், புழல் ஏரியில் 72.76 சதவீதமும் பூண்டி ஏரியில் 14.17 சதவீதமும், சோழவரம் ஏரியில் 10.45 சதவீதமும் கண்ணன்கோட்டை ஏரியில் 60.6 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.