இலங்கை: செம்மணி மனித புதைகுழிகள்; மனித உரிமை மீறலுக்கு நீதி வேண்டி நடைபெற்ற தீப்பந்தப் போராட்டம்!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக குறிப்பாக செம்மணி பகுதியில் அதிகளவிலான குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளுக்கு எதிராக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை யாழ்ப்பாண செம்மணி வளைவுப் பகுதியில் வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வந்தது.

கடைசி நாளான புதன்கிழமை அன்று செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்பு கூட்டுத் தொகுதிகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டமும், தீப்பந்தப் போராட்டமும் நடைபெற்றது. இதில் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசியப் பேரவையின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்

யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், செம்மணி, கொக்குத் தொடுவாய், மன்னார் மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையை நிராகரித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீயிட்டு எரித்தனர்.

போராட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு, மனுவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
- செ. கிரிசாந்