சத்தீஸ்கரில் ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் சரண்!
சத்தீஸ்கர் மாநிலத்தில், இன்று (அக். 2) ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
பிஜப்பூர் மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று 103 மாவோயிஸ்டுகள், சத்தீஸ்கர் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படை அதிகாரிகளின் முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சரணடைந்துள்ள 103 பேரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், ஏற்கெனவே 49 பேரை பிடிக்க பாதுகாப்புப் படையினர், கூட்டாக ரூ1.6 கோடி வெகுமதி அறிவித்து தேடி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அப்பகுதிகளில் செயல்பட்ட மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் மறுவாழ்விற்காக அவர்களிடம் தலா ரூ.50,000 மதிப்புள்ள காசோலைகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல், பிஜப்பூர் மாவட்டத்தில் 421 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 410 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகளில் 137 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!