இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி, அடுத்த வாரம் இந்தியா வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியது முதல் தலிபான்களின் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகின்றது. தலிபான் அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை அவர்கள் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி, வரும் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைச்சர் முத்தாகி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், சர்வதேச பாதுகாப்பு ஆணையம் அவர் பயணம் செய்ய விதித்திருந்த தடையானது நீக்கப்படாததினால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவுக்கும் தலிபான் அரசுக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில மாதங்களாக மேம்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்ததுடன், இந்தியாவில் உள்ள ஆப்கன் தூதரகங்களை தலிபான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.
இத்துடன், கடந்த செப்டம்பர் மாதம் தலிபான் அரசின் மருத்துவம் மற்றும் உணவுத் துறையின் இணையமைச்சர் ஹம்துல்லா சாஹித் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!