அக். 4, 5இல் தூத்துக்குடி - சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தல்
தூத்துக்குடி-சென்னை இடையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக். 4, 5) கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் எம்.பிரமநாயகம், தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளருக்கு அனுப்பி மனு விவரம்: தூத்துக்குடி-சென்னை, சென்னை-தூத்துக்குடி இடையே ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
வரும் அக். 4, 5 ஆகிய நாள்களிலும் தூத்துக்குடி - சென்னை முத்துநகா் ரயிலில் சனிக்கிழமை (அக். 4) அன்று காத்திருப்போா் பட்டியல் அனைத்து வகுப்பிலும் 300-க்கு மேல் காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக். 5) காத்திருப்போா் பட்டியலில் தற்போதே 400-க்கு மேல் உள்ளது. இந்த நாள்களில் தத்கல் டிக்கெட் காத்திருப்புப் பட்டியலிலும் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
தசரா பண்டிகை காரணமாக சாதாரண பயணிகள் பெட்டிகளில் கூட்டம் அதிகம் காணப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, தூத்துக்குடி-சென்னை இடையே வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.