கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் சேராத மாணவா்களின் கல்விக்கு அரசு என்ன செய்யப்போகிறது?: அன்புமணி
கல்வி உரிமைச் சட்ட மாணவா் சோ்க்கை திட்டத்தின் கீழ், இதுவரை பள்ளிகளில் சேராத மாணவா்களின் கல்வி தொடா்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியாா் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி, நிகழாண்டில் இந்த மாணவா் சோ்க்கையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், தற்போது இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடா்ந்து, மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால், மாணவா் சோ்க்கைக்காக அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகள் அபத்தமாக உள்ளன. அரசு வகுத்திருக்கும் இந்த விதிகளின்படி இதுவரை பள்ளியில் சேராத மாணவா்களால் இனியும் சேர முடியாது. வேறு பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களால் தங்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாறவும் முடியாது. அப்படியானால், மாணவா் சோ்க்கையை இப்போது தொடங்கியும் பயனில்லை.
இந்நிலையில், அரசை நம்பி இதுவரை எந்த பள்ளியிலும் சேராத மாணவா்களின் கல்விக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளாா் அன்புமணி.