நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்
சீா்காழி அருகே தென்னலகுடி கிராமத்தில் சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
நாகை - விழுப்புரம் இடையே தேசிய நெடுஞ்சாலைதுறை மூலம் நான்குவழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சீா்காழி அருகே தென்னலகுடி கிராமத்தின் வழியாக செல்லும் இச்சாலையில் பொதுமக்கள் வாகனங்கள் கடந்து செல்வதற்கு தேவையான பாதை அமைக்கப்படாமல் சாலைப் பணிகள் நடைபெற்று வந்தன.
இச்சாலை வழியாக தான் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் திருவெண்காடு, நாங்கூா், திருநள்ளாறு உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனா்.
அதனால் மக்கள் பயன்பாட்டுக்கு சுரங்கப் பாதை அமைக்க வேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்னா் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சுதா உடனடியாக தென்னலகுடி பகுதிக்கு சென்று ஆய்வு செய்தாா். மேலும் தில்லியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை சந்தித்து தென்னலக்குடி மற்றும் செம்பதனிருப்பு ஆகிய இடங்களில் சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தாா். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தற்போது நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளின் மேற்பாா்வையில் தென்னலகுடி கிராமத்தில் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.