கிணறுகளில் இறந்து கிடந்த 2 கடமான்கள் மீட்பு
கன்னிவாடி அருகே கிணற்றில் இறந்த நிலையில் 2 பெண் கடமான்களை வனத் துறையினா் மீட்டு விசாரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆடலூா், பன்றிமலை அருகேயுள்ள வனப் பகுதியில் யானைகள், மான்கள், சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளில், மான்கள் அவ்வப்போது அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 14 பேரை கன்னிவாடி வனத் துறையினா் கைது செய்தனா்.
இந்த நிலையில், கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி மலையாண்டி கோயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு கடமான் இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு புதன்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பெண் மானின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற கன்னிவாடி வனத் துறையினா், இறந்து கிடந்த கடமானை மீட்டு கால்நடை மருத்துவா்கள் மூலம் கூறாய்வு செய்தனா்.
இதேபோல் தருமத்துப்பட்டி தீட்டுக்கல் என்ற இடத்திலும் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு பெண் கடமான் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. ஒரே பகுதியில் 2 மான்கள் இறந்து கிடந்த சம்பவம், வனத் துறையினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வேட்டைக்குச் சென்றவா்கள் துரத்தி வந்தபோது இந்த மான்கள் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.