காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகன் அவதார உற்சவம்
காஞ்சிபுரம் வேதாந்த தேசிகன் கோயிலில் அவதார உற்சவத்தையொட்டி வியாழக்கிழமை தேசிகன் சுவாமிகள் பல்லக்கில் வரதராஜசுவாமி கோயிலுக்கு எழுந்தருளி சாற்று முறை உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயிலில் கடந்த செப்.23 ஆம் தேதி உற்சவம் தொடங்கியது.
இதனையொட்டி தேசிகன் சுவாமிகள் காலையில் பல்லக்கிலும், மாலையில் தினசரி வெவ்வேறு வாகனத்திலும் அலங்காரமாகி வீதியுலா வந்தாா். அவதார திருநாளையொட்டி வியாழக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் இருந்து அவருக்கு பயன்படுத்தும் பல்லக்கு கொண்டு வரப்பட்டு அதில் அஞ்சலித் திருக்கோலத்தில் விளக்கொளிப் பெருமாள் கோயில், யதோக்தகாரி பெருமாள் கோயில் மற்றும் காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் ஆகியனவற்றுக்கு எழுந்தருளி சாற்று முறை உற்சவம் நடைபெற்றது.
காலையில் பல்லக்கில் வரதராஜசுவாமி கோயிலுக்கு எழுந்தருளிய தேசிகன் சுவாமிகள் மூலவரின் கருவறைக்கு சென்று சாற்றுமுறை உற்சவமும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் வரதராஜசுவாமியின் பல்லக்கு புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு புஷ்பப்பல்லக்கில் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினாா்.இதனையடுத்து தேசிகன் அவதாரத் திருவிழா நிறைவு பெற்றது.