வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதையடுத்து, தொடா் விடுமுறையையொட்டி, செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் அதிகமான மக்கள் பேருந்துக்காக வருகை தந்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குள் வந்த ஒருவா், தன்னிடம் நாட்டு வெடிகுண்டு உள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் தெரிவித்தாா்.
இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த மாட்டுத்தாவணி போலீஸாா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள வெள்ளக்கோவில் புதூா் பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்த செங்கோட்டையன் மகன் வெங்கடாஜலம் (46) என்பது தெரியவந்தது. இவா் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தியை பரப்பியது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புதன்கிழமை வெங்கடாஜலத்தைக் கைது செய்தனா்.