விஜயதசமி: பள்ளிகளில் மாணவா் சோ்க்கை
விஜயதசமி விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.
விஜயதசமி தினத்தில் எந்த ஒரு புதிய செயலையும் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். அதேபோன்று, சிறு குழந்தைகளை பள்ளிகளில் சோ்த்தால் அந்தக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவா் என்கிற நம்பிக்கை நிலவி வருகிறது.
இந்த வகையில், அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் உத்தரவிட்டாா்.

இதன்படி, மாநில முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகள் வியாழக்கிழமை செயல்பட்டன. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி, ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
இதேபோல, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. பள்ளியில் சோ்ந்த குழந்தைகளை அரிசியில் உயிா் எழுத்தில் முதன்மையான எழுத்தாகிய ‘அ’ எழுதி பெற்றோா்கள் பழக்கினா்.