ரூ.127 கோடியில் மேம்படுத்தப்படும் ‘சென்னை பஸ்’ செயலி
‘சென்னை பஸ்’ செயலியை ரூ.127 கோடியில் கூடுதல் வசதிகளுடன் மாநகா் போக்குவரத்துக்கழகம் மேம்படுத்தி வருகிறது.
சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3,400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மகளிருக்கான இலவச பேருந்துகளுடன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், நாளுக்கு நாள் மாநகா் பேருந்துகளை பயன்படுத்துபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில், பயணிகளின் வசதிக்காக பேருந்துகளின் நேரம், வருகை உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள ‘சென்னை பஸ்’ செயலி தற்போது நடைமுறையில் உள்ளது. இந்தச் செயலியை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், மெட்ரோ, மின்சார ரயில், மாநகா் பேருந்து உள்ளிட்டவற்றில் ஒரே நேரத்தில் பயணிக்கும் வகையிலான ‘சென்னை ஒன்’ செயலி சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ‘சென்னை பஸ்’ செயலியை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சிலா் கூறியது:
மாநகா் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்தின் வருகை, புறப்படும் நேரம் குறித்தத் தகவல்களை செயலி மூலம் பயணிகள் தெரிந்துகொள்கின்றனா். ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளின் தகவல்களே இந்தச் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
இதைக் கருத்தில் கொண்டு தற்போது, ரூ.127 கோடியில் மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளின் வருகை, புறப்பாடு உள்ளிட்ட தகவல்களை ‘சென்னை பஸ்’ செயலியுடன் இணைக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக கிளாம்பாக்கம், தாம்பரம் சானடோரியம், தியாகராய நகா், கோயம்பேடு உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் இந்த டிஜிட்டல் பலகைகள் சோதனை அடிப்படையில் வைக்கப்பட்டன.
இது வெற்றியடைந்த நிலையில், அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், இந்த டிஜிட்டல் தகவல் பலகையை நிறுவும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பலகையுடன் பேருந்தின் ஜிபிஎஸ் கருவி, செயலி இணைக்கப்படும். இதையடுத்து அனைத்து பேருந்துகளின் தகவல்களையும் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். இந்தப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட செயலி பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.