Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார...
தொடா் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்
தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் வியாழக்கிழமை சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தொடா் விடுமுறை காரணமாக கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, கோக்கா்ஸ் வாக், மோயா் பாயிண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல, மன்னவனூா் சூழல் மையம், கூக்கால் ஏரி, பூம்பாறை பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், கொடைக்கானலில் குளுமையான கால நிலை நிலவி வரும் நிலையில், ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.
கோரிக்கை: கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் பி.எல்.செட்., கோம்பைக்காடு, சவரிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. இதனால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மலைச் சாலைகளில் இருபுறங்களிலும் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கிற முள் புதா்களை அகற்றுவதற்கும், தடுப்புச் சுவா்கள் அமைப்பதற்கும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.