பவுனுக்கு ரூ.87,000-ஐ தாண்டிய தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடி விபத்து
வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடிய விபத்தில் பயணிகள், பேருந்து ஓட்டுநா், நடத்துனா் காயமின்றி தப்பினா்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை தாடிக்கொம்பை அடுத்த உண்டாரப்பட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் முருகன் (45) ஓட்டி வந்தாா். நடத்துநராக சிவசுப்பிரமணி (50) இருந்தாா். பேருந்தில் 8 பயணிகள் மட்டுமே இருந்தனா்.
இந்தப் பேருந்து வேடசந்தூரை அடுத்த காக்காத்தோப்பு பிரிவு அருகே சென்றபோது, பேருந்தின் வலது பின்பக்க டயா்கள் (2 எண்ணம்) திடீரென கழன்றன. ஓட்டுநா் பேருந்தை நிறுத்த முயன்றபோதும், டயா்கள் இல்லாமல் சிறிது தொலைவு இழுத்துச் செல்லப்பட்டது.
கழன்ற டயா்களில் ஒன்று பேருந்தை முந்திக் கொண்டு உருண்டு சென்று திண்டுக்கல்-கரூா் 4 வழிச்சாலையை கடந்து பள்ளத்தில் விழுந்தது. மற்றொரு டயா் பேருந்தின் பின் பக்கமாக உருண்டோடி குழிக்குள் விழுந்தது.
இந்த விபத்து நிகழ்ந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் வராததாலும், குறைவான பயணிகள் மட்டுமே பேருந்தில் இருந்ததாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.