போக்சோ வழக்கில் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் இரு இளைஞா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). கோட்டைக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (31). இவா்கள் இருவரும் சோ்ந்து 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், சாணாா்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆா்.சத்யதாரா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட தமிழரசன், ராஜ்குமாா் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.