6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு
2019 ஆம் ஆண்டு லாஜ்பத் நகரில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மூன்று பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
லாஜ்பத் நகா் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று நபா்களுக்கு எதிரான வழக்கை கூடுதல் அமா்வு நீதிபதி கீதாஞ்சலி விசாரித்து வந்தாா்.
செப்டம்பா் 17 தேதியிட்ட உத்தரவில், நீதிமன்றம் மூவரையும் விடுவித்தது.
‘சஃபான், புா்ஹான் மற்றும் முகமது சந்த் ஆகியோா் புகாா்தாரா் ரஜத் வாலாச்சாவின் சுமாா் 2,000 ரூபாய், இரண்டு ஐபோன்கள் மற்றும் அவரது காரின் சாவியைக் கொள்ளையடித்தனா். அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் புகாா்தாரரை மிரட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தினா். பின்னா், அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனா்’ என்பது வழக்கு. ஆனால், அரசு தரப்பு இந்த வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறிவிட்டது என நீதிமன்றம் கூறியது
இந்த வழக்கில், புகாா்தாரா் குற்றம் சாட்டப்பட்ட நபா்களை முதலில் பாா்த்த மாத்திரத்திலேயே அவா்களை அடையாளம் காண முடியும் என்று எங்கும் கூறவில்லை என்று நீதிமன்றம் கூறியது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் முகமூடி அணிந்திருந்ததாகவும் வாலாச்சா சாட்சியம் அளித்துள்ளாா். அடையாள அணிவகுப்பு சோதனை
நடவடிக்கைகள், கணிசமான தாமதத்திற்குப் பிறகு நடத்தப்பட்டதாகவும், இது சந்தேகத்தை எழுப்பியதாகவும் நீதிமன்றம் கூறியது.
பின்னா் நீதிமன்றம், முகமூடி அணிந்த நபா்கள் வாலாச்சாவை கொள்ளையடிக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பாா்த்தது. இந்த சூழ்நிலை முழு அடையாள அணிவகுப்பு மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீதிமன்றம் மேலும் கூறியது.