புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படை!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆனந்தை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
முதல்கட்டமாக, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில், ஆனந்த் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் ஆனந்த் தங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக காவல்துறை ஐஜி ஜோஷி நிர்மல் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மட்டுமின்றி சென்னையிலும் ஆனந்தை தேடும் பணியைக் காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
இதனிடையே, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.