கரூர்: "தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா?" - தமிழிசை காட்டம்
கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கரூர் சம்பவம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
"ஒரு கூட்டத்தில் நியாயமாக தொண்டர்கள் கூட வேண்டும். முதலில் குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வருவதைத் தடுக்க வேண்டும்.
இந்த கரூர் சம்பவத்தில் தவெகவிற்கு இடம் கொடுப்பதிலிருந்து நேரம் நிர்ணயிப்பதிலிருந்து காவல்துறையினர் தடுமாற்றத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றனர்.
காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மரணங்களைத் தடுத்திருக்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அவரிடம் தமிழகத்திற்கு பாஜக அனுப்பி வைத்த குழு ஏன் மணிப்பூருக்கும், கும்பமேளாவிற்கும் செல்லவில்லை என்று கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி எழுப்பிய கேள்வி குறித்து தமிழிசையிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், "நம் மாநிலத்தில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா? தமிழ்நாட்டின் மீது அக்கறையில்லையா உங்களுக்கு? அதைப் பாரு இதைப் பாரு என்று திமுகவினர் சொல்கிறார்கள். முதலில் தமிழகத்தைப் பாருங்கள். துபாய் போய்விட்டார் துணை முதல்வர்.

பாஜக அமைத்த குழு எங்கு உண்மையை மக்களுக்கு நேரடியாகச் சொல்லிவிடுமோ? என்கிற பயம்தான் அவர்களுக்கு. செந்தில் பாலாஜி சொல்வதை நான் எந்த விதத்திலும் நியாயம் என்று சொல்ல மாட்டேன்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.