5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகளும் தான் மட்டுமே பதவி வகிப்பேன் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசில், துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவி வகிக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படும் எனவும், டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயர்த்தப்படுவார் எனவும் அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வருகின்றன.
இதில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வரும் நவம்பர் மாதம் இரண்டரை ஆண்டுகளை நிறைவுச் செய்யும் நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஹெச்.டி. ரங்கநாத் மற்றும் முன்னாள் எம்.பி. எல்.ஆர். சிவராமே கவுடா ஆகியோர் டி.கே. சிவக்குமார் அடுத்த முதல்வராகப் பதவியேற்பார் எனக் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
“அனைவரும் நவம்பர் புரட்சியைக் குறித்து பேசிவருகிறார்கள் 5 ஆண்டுகள் முழுவதும் நான்தான் முதல்வராகப் பதவி வகிப்பேன். ஆனால், உயர் தலைவர்கள் என்ன முடிவு செய்கின்றார்களோ அதன்படியே நாம் நடக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் சித்தராமையா 5 ஆண்டுகள் தனது பதவியை நிறைவு செய்யமாட்டார் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், கடந்த 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் சித்தராமையா கர்நாடகத்தின் முதல்வராகப் பதவி விகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!