75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி
இந்தியாவிடம் ஆசியக் கோப்பை ஒப்படைக்க பாகிஸ்தான் அமைச்சர் நிபந்தனை!
இந்தியாவிடம் ஆசியக் கோப்பையை ஒப்படைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி நிபந்தனை விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று நாட்டின் பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்தனர்.
ஆனால், ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிகளின் போது, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காதது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு எதிராக ஐசிசியில் பாகிஸ்தான் புகாரும் அளித்திருந்தது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் புள்ளிப்பட்டியலில் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதின. இதில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போதும், இருநாட்டு வீரர்களும் கைகுலுக்கவில்லை.
இந்த நிலையில், பரிசளிப்பு விழாவின்போது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வியின் கைகளால் கோப்பையை பெற மாட்டோம் என்று இந்திய வீரர்கள் தெரிவித்தனர்.
இதனால் பரிசளிப்பு விழா நடைபெற சில மணிநேரம் தாமதம் ஏற்பட்டது. நக்வியும் வேறொருவரின் கைகளால் கோப்பையை வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனிடையே, சிறந்த பந்து வீச்சு, ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை இந்திய அணியின் குல்தீப் யாதவ், திலக் வர்மா, அபிஷேக் சர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பாகிஸ்தான் கேப்டன் ரன்னர்-அப் பரிசுத் தொகைக்கான காசோலையை நக்வியிடம் பெற்றுக் கொண்டார்.
மேலும், பரிசளிப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சைமன் டூல், இந்திய அணியினர் சாம்பியன் கோப்பையை தற்போது பெறப்போவதில்லை என்று தெரிவித்து, நிகழ்ச்சி முடிந்ததாக அறிவித்தார்.
இந்திய வீரர்களும் கோப்பையே இல்லாமல் வெறும் கைகளுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டாடினர்.
இதுதொடர்பாக, ஐசிசியிடம் புகார் அளிக்கப் போவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு கோப்பையை வழங்க ஆசியக் கோப்பை நிர்வாகத்திடம் நக்வி ஒரு நிபந்தனை விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் முறையான பரிசளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தால், அதில் கோப்பையை வழங்குவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அப்படியொரு விழாவை ஒருபோதும் நடத்தமாட்டோம் என்று பிசிசிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதன்காரணமாக, மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்துக்கு ஆசியக் கோப்பையை கொண்டுவருவதில் தாமதம் நீடிக்கிறது.