மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விவகாரத்தில் கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, செய்தியாளர்கள் மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக செந்தில் பாலாஜி மீதான விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதலளித்து செந்தில் பாலாஜி பேசுகையில், ”அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அது எடுபடவில்லை, அதனால் தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை முன்வைத்து அதன்மூலம் மக்களிடம் தவறான கருத்துகளைப் பரப்ப நினைக்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ரூ. 10க்கு கீழ் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது 7,540. ரூ. 10-க்கும் மேல் வசூலிப்பதாக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது 8,666. புகார்களின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட அபராத் தொகை ரூ. 14,000 கோடி.
2021-க்குப் பிறகு, திமுக ஆட்சியில் ரூ. 10க்கு கீழ் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களின் நடவடிக்கை 18,253. 10-க்கும் மேல் வசூலிப்பதாக வந்த புகார்களின் நடவடிக்கை 2,356. இந்த புகார்களின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட அபராத் தொகை ரூ. 8 கோடியே 51 லட்சம்.
இந்த 5 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை ஒருவருக்கு செல்கிறது என்றால், அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் சென்றிருக்கும். இனிமேல் பழனிசாமியையும் 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கப்படலாம்.
எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே அவதூறுகளைப் பரப்புகிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பின்னர், இது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கிறேன்” என்றார்
இதையும் படிக்க: கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி