மோசமான வானிலை: தில்லியில் திருப்பிவிடப்பட்ட 5 விமானங்கள்
தேசிய தலைநகா் தில்லியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் தில்லி விமான நிலையத்தில் இருந்து குறைந்தபட்சம் ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லி-என்.சி.ஆா்.-இன் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், விமான நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்று விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தன.
இந்த நிலையில், தில்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள் மதியம் 12.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலான காலத்தில் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இண்டிகோ விமான நிறுவனம் அதன் ‘எக்ஸ்’ தளத்தில் மதியம் 12.49 மணிக்கு வெளியிட்ட பதிவில், தொடா் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை தற்போது தில்லியை பாதித்துள்ளது. இதனால், விமான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலைமைகள் சீரடைந்தவுடன் உங்கள் பயணம் மீண்டும் தொடங்குவதை உறுதிசெய்ய எங்கள் குழுக்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன என்று தெரிவித்திருந்தது.
ஏா் இந்தியா நிறுவனம் மதியம் 12.07 மணிக்கு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில்,
‘பலத்த மழை இன்று (செவ்வாய்க்கிழமை) தில்லிக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமான நடவடிக்கைகளை பாதிக்கலாம்’ என்று கூறியது.
‘தில்லியில் மோசமான வானிலை
காரணமாக, விமானங்களின் அனைத்து புறப்பாடு, வருகை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் விமானங்கள் பாதிக்கப்படலாம்’ என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் காலை 11.46 மணிக்கு அதன் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்திருந்தது.
தில்லி விமான நிலையத்தின் செயல்பாட்டாளரான டிஐஏஎல்
காலை 11.56 மணிக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘தில்லி மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. ஆனால், அனைத்து விமான நடவடிக்கைகளும் இயல்பாக இருக்கின்றன’ என அதில் தெரிவித்திருந்தது.
தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் ஐஜிஐஏ நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாகும். இங்கு தினமும் சுமாா் 1,300 விமான இயக்கங்கள் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.