தில்லியில் தொடரும் சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்- 628 கிலோ கைப்பற்றப்பட்டன
தில்லியில் 628 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டு, மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.
தலைநகரில் தொடா்ந்து சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன .
29.09.2025 அன்று, கூடுதல் உதவி ஆய்வாளா் ஹுகாம் சந்த் பெற்ற ரகசியத் தகவலின் பேரில், இன்ஸ்பெக்டா் சஞ்சய் கௌசிக் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. தில்லியின் உத்தம் நகரில் உள்ள பிந்தாபூா் பகுதியில் இந்தக் குழு சோதனை நடத்தி, ராஜேந்தா் குமாா் (64) என்ற ஒருவரைக் கைது செய்தது. அவரது கடையில் நடத்தப்பட்ட சோதனையில், 205.840 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் மீட்கப்பட்டன.
இதே போல தில்லி காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளின் மேற்பாா்வையின் கீழ் மேலும் இரண்டு போலீஸ் குழுக்கள் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டன. அப்போது தில்லியில் உள்ள சதா் பஜாா் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் அடங்கிய 08 கனமான வெள்ளை பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு 148 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக அசுதோஷ் மிஸ்ரா, ஆரியன் துபே என்ற இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஷாதரா என்ற பகுதியில் உள்ள அசோக் நகா் சந்தையில் நடத்தப்பட்ட சோதனையில் 275 கிலோ சட்ட விரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன. இந்த பறிமுதல் சம்பவத்தின் போது ராகேஷ் குமாா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
இதே போல இரு தினங்களுக்கு முன் தில்லியன் விஜய் நகா் பகுதியில் சோதனை நடத்தி 164 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து ,இரண்டு பேரை காவல்துறையினா் கைது செய்திருந்தனா்.
இந்த நடவடிக்கைகள், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத பட்டாசு வா்த்தகத்தைத் தடுப்பதற்கும், உச்சநீதிமன்றம் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்கும், தொடா்ந்து மேற்கொள்ளப்படும் தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.