பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!
மறைந்த பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர் மற்றும் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கர்க் (வயது 52), சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி செப். 19 ஆம் தேதி மரணமடைந்தார்.
சிங்கப்பூரில் உடற்கூராய்வு செய்யப்பட்ட ஸுபீன் கர்லின் உடல், அஸ்ஸாம் கொண்டுவரப்பட்ட நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருத்துகள் பரவியது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் இரண்டாவது முறையாக உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஸுபீன் கர்க் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவரது மனைவி கரிமா சைகியா கர்க் தெரிவித்தார்.
”ஸுபீன் கர்க்கிற்கு உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. தற்போதும் அவரது மரணம் மர்மமாகவே இருக்கிறது. சிங்கப்பூர் சென்றிருந்தபோது, சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி குறித்து அவருக்கு தெரியாது. அவருக்கு தெரிந்திருந்தால் தொலைபேசியில் என்னிடம் பேசும்போது கூறியிருப்பார்.
வலிப்பு நோய்க்காக ஒரே ஒரு மாத்திரை மட்டும்தான் ஸுபீன் எடுத்துக் கொள்கிறார். அவரது மேலாளருக்கும் அது நன்றாக தெரியும். அவர் நீந்த முடியாத நிலையில் இருந்தபோதும் ஏன் அவரைத் தண்ணீரிலிருந்து தூக்கவில்லை? அவருக்கு வலிப்பு நோய் இருப்பதால் தண்ணீர் அல்லது நெருப்பின் அருகில் செல்லக் கூடாது என்பது அவரின் மேலாளருக்கும் தெரியும்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தில்லி குருகிராமில் வைத்து ஸுபீனின் மேலாளர் சித்தார்த் சர்மாவையும், விமான நிலையத்தில் வைத்து சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தாவையும் அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் புதன்கிழமை காலை தில்லியில் இருந்து குவஹாத்தி அழைத்துவரப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.