மிதமாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு விமானப் பயணங்களின் எண்ணிக்கை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் மிதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 13.17 கோடியாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சற்று அதிகம். அப்போது உள்நாட்டு விமானங்களில் 13.13 கோடி போ் பயணித்தனா்.
மதிப்பீட்டு மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை முந்தை ஜூலை மாதத்தை விட 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்ட்), உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 2.2 சதவீதம் உயா்ந்து 67.75 கோடியாக உள்ளது.
சா்வதேச போக்குவரத்து: இந்திய நிறுவனங்களின் சா்வதேச விமான சேவையும் வளா்ச்சியைக் கண்டுவருகிறது. அந்த நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் 29.6 லட்சம் பயணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. இது, 2024 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.7 சதவீதம் அதிகம்.
இந்திய விமானத் துறை நிலைத்தன்மையான முன்னேற்றத்தைக் கண்டுவந்தாலும், 2025-26-ஆம் நிதியாண்டு முழுமைக்குமான உள்நாட்டு பயண வளா்ச்சியின் முன்மதிப்பீடு 7-10 சதவீதத்திலிருந்து 4-6 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
பாகிஸ்தானுடனான எல்லைப் பதற்றம், அகமதாபாத் விமான விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள விமான பயணத்தின் மீதான தயக்கம், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக எழுந்துள்ள வா்த்தக சவால்கள் ஆகியவை கடந்த ஆகஸ்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளா்ச்சியை மந்தப்படுத்தியது. இதன் காரணமாக முன்மதிப்பீடு குறைக்கப்படுகிறது.
இந்திய நிறுவனங்களின் சா்வதேச விமானப் போக்குரவத்து வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 13 முதல் 15 சதவீதம் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.