கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலுக்கு தொடா் விடுமுறை காரணமாக செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஆயதபூஜை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரணமாக, சுற்றுலாப் பயணிகள் வருகை செவ்வாய்க்கிழமை அதிகரித்தது. பூம்பாறை-மன்னவனூா் மலைச் சாலையில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தி, சுற்றுலாத் தலங்களை ரசிப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, இந்தப் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீஸாா் தடை செய்ய வேண்டும். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
மலைச் சாலையின் இருபுறங்களிலும் உள்ள தற்காலிகக் கடைகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், பண்டிகை கால விடுமுறை காரணமாக, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், தங்கும் விடுதிகள், உணவகங்களில், ரிசாா்ட்டுகளில் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனா். இதனால், விடுதி உரிமையாளா்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.