BCCI: 'மாத சம்பளம் இல்லை; பிசிசிஐ-யின் 37- வது தலைவர்'- யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?
பிசிசிஐ தலைவர் பதவியை வகித்து வந்த 70 வயதுடைய ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
பிசிசிஐ-யின் 37-வது தலைவராக பதவியேற்றிற்கும் மிதுன் மன்ஹாஸுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?
46 வயதாகும் மன்ஹாஸ் ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர். மிதுன் மன்ஹாஸ் முதல்தர கிரிக்கெட்டில் 1547 ஆட்டங்கள், லிஸ்ட் ஏ போட்டியில் 130 ஆட்டங்கள், ஐபிஎல் தொடரில் 55 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடினார். ரஞ்சி போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
ஜம்மு & காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குறைபாடு காரணமாக, அதன் விவகாரங்களை நிர்வகிக்க பிசிசிஐ அமைத்த மூன்று பேர் கொண்ட தற்காலிகக் குழுவின் இயக்குநராகவும் மிதுன் மனாஸ் பணியாற்றியுள்ளார்.
பிசிசிஐ தலைவர் பதவி ஒரு கௌரவப் பதவி என்பதால், மிதுன் மன்ஹாஸுக்கு நிலையான ஆண்டு அல்லது மாதாந்திர சம்பளம் எதுவும் வழங்கப்படாது.

இருப்பினும், அனைத்து உத்தியோகப்பூர்வ செலவுகளையும் ஈடுசெய்யும் வகையில் அவருக்குப் போதுமான தினசரி படிகள் (Daily Allowances) மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.