Doctor Vikatan: `ஆயுத பூஜைக்கு அரிசிப் பொரி' - வெயிட்லாஸுக்கு உதவுமா, இதன் நன்மைகள் என்ன?
Doctor Vikatan: ஆயுத பூஜைக்கு வீடு நிறைய அரிசிப் பொரி நிறையும். அதைச் சாப்பிடுவதால் ஆரோக்கியப் பலன்கள் ஏதும் உண்டா... அரிசிப் பொரி சாப்பிட்டால் வெயிட்லாஸ் முயற்சி எளிதாகுமா, அதை எப்படியெல்லாம் சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அரிசிப் பொரி ஆரோக்கியமான உணவுதான். ஆனால், அதில் உப்பு சேர்க்கப்படுவதால், பிபி எனப்படும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டும் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், அரிசிப் பொரி என்பது வெயிட்லாஸ் முயற்சியில் உள்ளோருக்கு நிச்சயம் உதவும். கலோரியைப் பொறுத்தவரை, அரிசியில் எந்த அளவு கலோரிகள் இருக்குமோ, அதே அளவு கலோரிகள்தான் அரிசிப் பொரியிலும் இருக்கும்.
குளுட்டன் இல்லை, நார்ச்சத்து அதிகம்
அரிசிப் பொரி என்பது அரிசியில் இருந்து பெறப்படுவதால், அதில் குளுட்டன் இருக்காது. இப்போது நிறைய பேருக்கு குளுட்டன் அலர்ஜி என்ற பிரச்னை இருப்பதைப் பார்க்கிறோம்.
குறிப்பாக, கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளோருக்கு குளுட்டன் இல்லாத உணவுகளைச் சாப்பிட அறிவுறுத்தப்படும். அவர்களுக்கெல்லாம் அரிசிப் பொரி சிறந்த உணவு.
அரிசிப் பொரியில் நார்ச்சத்து அதிகம் என்பதால் செரிமானம் எளிதாக நடக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் அரிசிப் பொரி ஏற்ற உணவு. அளவோடு சாப்பிடும்போது அரிசிப்பொரி சிறந்த உணவு என்பதில் சந்தேகமில்லை.
அளவு தாண்டினால், கலோரி அதிகரிக்கும். சிலருக்கு வயிற்று உப்புசம் ஏற்படலாம். அரிசியில் உள்ள மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை எல்லாம் அரிசிப் பொரியிலும் இருக்கும்.
நல்ல சாய்ஸ்
அரிசியைப் பயன்படுத்தும்போது, அதைக் கழுவி, ஊறவைத்து உபயோகிக்கிறோம். அதில் வைட்டமின் பி சத்து வீணாகிவிடும். அதுவே அரிசிப் பொரியில் அந்தப் பிரச்னை இல்லை.

அரிசிப் பொரியில் சாலட், உப்புமா போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். வெயிட்லாஸ் முயற்சியில் உள்ளோருக்கு பசியெடுக்கும்போது எப்படிப்பட்ட நொறுக்குத்தீனி சாப்பிடுவது என்பது பெரும் பிரச்னையாக இருக்கும். அவர்களுக்கு அரிசிப் பொரி நல்ல சாய்ஸ்.
அரிசிப் பொரியில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதோடு, கலோரி குறைவாகவும் உடலில் சேரும்.
வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து வீட்டிலேயே மசாலா பொரி செய்து சாப்பிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.