செய்திகள் :

Gaza-Israel போர் உண்மையாக முடிவுக்கு வருமா? யார் இந்தசார் டோனி பிளேயர் ? `GITA'-வின் திட்டம் என்ன?

post image

காசா போர்

இஸ்ரேல் - காசா இடையே போர் தொடங்கி இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் போரில் 66,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அதே நேரம் இஸ்ரேல், காசாவில் ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சத்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உலக நாடுகள் காசாவுக்கு அனுப்பும் உதவிகளையும் இஸ்ரேல் இராணுவம் தடுக்கிறது. பெண்களும், சிறுவர்களும் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவத்தின் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட காசா மக்கள்
பாதிக்கப்பட்ட காசா மக்கள்

காசாவில் இருக்கும் மருத்துவமனைகளும், கல்விக் கூடங்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. போரால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சமடைந்த அகதிகள் முகாம்கள் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலுக்கு இரையானது.

இந்தப் போர் எப்படியாவது முடிவுக்கு வரவேண்டும் என உலக மக்களின் பெரும் வேண்டுதல் இப்போதுவரை நிறைவேறவே இல்லை.

அதன் விளைவாக அமெரிக்கா, கனடா, இத்தாலி, பாரிஸ் உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் போராட்டங்கள், இஸ்ரேலுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுந்தன.

தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேல்

அதன் பிரதிபலிப்பு ஐ.நா-விலும் எதிரொலித்தது. 194 நாடுகள் உறுப்பினராக இருக்கும் ஐ.நாவில் 75 சதவிதத்துக்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன.

அது இயல்பாக இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான குரலாக மாறியது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இஸ்ரேலுடனான வர்த்தக உறவைத் துண்டிக்கும் முடிவுவரை ஆலோசித்தன. பல்வேறு நாடுகள் இஸ்ரேலில் இருக்கும் தூதரகங்களை மூடின.

விளையாட்டுத்துறை, திரைத்துறையினரும் இஸ்ரேலைப் புறக்கணித்தனர். அதே நேரம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை மூலம் சமாதான நடவடிக்கையை மேற்கொண்ட கத்தார் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் உலக நாடுகளைக் கொந்தளிக்கச் செய்தது.

காசா
காசா

அதன் விளைவாக ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்றியபோது, ஐ.நா-வில் காலி இருக்கைகளே இருக்கும் வகையில், அவருக்கான புறக்கணிப்பு உச்சத்தைத் தொட்டது.

அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் இருக்கும் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இஸ்ரேல் மீது அதிருப்தி ஏற்பட்டது.

இதற்கிடையில், அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரவேண்டும் என வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டார்.

ட்ரம்பின் கோரிக்கைக்கு பதிலளித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், 'நோபல் பரிசு வேண்டுமென்றால், இஸ்ரேல் - காசா போரை நிறுத்த வேண்டும்' எனக் கூறிப்பிட்டார்.

சமாதானத்துக்கு வந்த நெதன்யாகு

இந்த நிலையில்தான், அதிபர் ட்ரம்பைச் சமாதானப்படுத்த, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றிருக்கிறார்.

இந்தச் சந்திப்பின்போதுதான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கத்தார் நாட்டிடம் தொலைபேசி மூலம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசனையின் பேரில் காசா - இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

அதன் விளைவாக உருவானதுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வைத்த அமைதி வாரியம். இந்தக் குழு இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சில நிபந்தனைகளை வைத்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.

நிபந்தனைகள்

அதன் முதற்கட்டமாக அங்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிடம் காசா போரை நிறுத்துவதற்கான 20 நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகள்...

1. இனி காசா தீவிரவாதம் இல்லாத ஒரு பகுதியாகவும், பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாததாகவும் மாறும்.

2. ஏற்கெனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மாதிரி காசா மறுகட்டமைக்கப்படும்.

3. இஸ்ரேல், ஹமாஸ் இரு பக்கமும் இந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புக்கொண்டால், உடனே போர் நிறுத்தம் ஏற்படும்... தாக்குதல்கள் நிறுத்தப்படும்.

4. இஸ்ரேல் இந்தப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட 72 மணிநேரத்தில், ஹமாஸ் அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். (அவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி... இறந்திருந்தாலும் சரி)

5. ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தவுடன், அக்டோபர் 7, 2023-க்குப் பிறகு, கைது செய்த 1,700 காசா மக்களை இஸ்ரேல் விடுவிக்கும். இறந்த இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒவ்வொரு உடலுக்கு, இறந்த 15 காசா மக்களை இஸ்ரேல் ஹமாஸிடம் ஒப்படைக்கும்.

ஹமாஸ்
ஹமாஸ்

6. ஆயுதங்களை விட்டு, அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் ஹமாஸ்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். அவர்கள் காசாவை விட்டு நீங்கி, எந்த நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறதோ, அங்கே பத்திரமாக அனுப்பப்படுவார்கள்.

7. போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஒப்புக்கொண்ட உடனே, காசாவிற்குள் மிகப்பெரிய அளவிலான உதவிகள் உள்நுழையும். இதில் தண்ணீர், மின்சாரம், மருத்துவ உதவி போன்றவற்றை அடங்கும். இது ஜனவரி 19, 2025-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது போல இருக்கும்.

8. இந்த உதவிகள் இரு பக்கத்திற்கும் நடுநிலையான ஐ.நா, செஞ்சிலுவை போன்ற அமைப்புகளால் வழங்கப்படும். இந்த உதவிகளுக்காக ரஃபா கிராசிங் (எகிப்து - காசா எல்லை) திறக்கப்படும்.

9. காசா தற்காலிகமாக பாலஸ்தீனிய தொழில்நுட்பக் குழுவால் (அரசியல் சாராத நிபுணர்கள்) நடத்தப்படும். அவர்கள் தண்ணீர், மின்சாரம்... போன்ற அன்றாட தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள்.

இவர்களது செயல்பாட்டை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான புதிய சர்வதேச அமைப்பு 'சமாதானக் குழு' கண்காணிக்கும். இந்த அமைப்பில் பிற உலக நாடுகளின் தலைவர்களும் இருப்பார்கள்.

பாலஸ்தீனம் சீர்திருத்தப்பட்டு பொறுப்பேற்கத் தயாராகும் வரை, இந்த அமைப்பு நிதி, நிர்வாகம் மற்றும் மறுவளர்ச்சியை நிர்வாகிக்கும்.

ட்ரம்ப் | ஐ.நா சபை
ட்ரம்ப் | ஐ.நா சபை

10. ட்ரம்ப் தலைமையிலான வளர்ச்சித் திட்டம் காசாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடு ஈர்ப்பு, மறுகட்டமைப்பு போன்றவை அடங்கும்.

11. காசாவிற்குள் சிறப்பு வர்த்தக மண்டலம் உருவாக்கப்படும். இங்கே சந்தைகளுக்குள் நுழைய சிறப்பு அனுமதி, குறைந்த வரி போன்றவை வழங்கப்படும். மேலும், பிற நாடுகளிடம் பேசி பிசினஸ் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.

12. காசாவில் இருந்து வெளியேறுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். மக்கள் அவர்களுக்கு வேண்டும்போது செல்லலாம், திரும்ப வரலாம். மக்களை காசாவில் இருக்க வைப்பதும், காசாவை மறுகட்டமைப்பதும் தான் முக்கிய நோக்கம்.

13. இனி காசாவின் அரசாங்கத்தில், ஹமாஸிற்கோ, பிற தீவிரவாத அமைப்புகளுக்கோ அனுமதி இல்லை. அனைத்துத் தீவிரவாத மற்றும் ராணுவக் கட்டமைப்புகளும் அழிக்கப்படும். மீண்டும் கட்டப்படாது. இந்த அழித்தலை ஒரு சுதந்திர அமைப்பு கண்காணிக்கும்.

14. ஹமாஸும், பிற பிரிவுகளும் அவர்களது உறுதியைக் காப்பாற்றுவதும், காசா அமைதியாக இருப்பதையும், பிறருக்கு அச்சுறுத்தலாக இல்லாததையும் பக்கத்து நாடுகள் உறுதி செய்யும்.

15. சர்வதேச நிலைத்தன்மைப் படை காசாவிற்கு அனுப்பப்படும். அவர்கள் பாலஸ்தீனத்தின் போலீசாருக்குப் பயிற்சி அளிப்பார்கள். பாலஸ்தீன போலீசார் அனுபவமிக்க ஜோர்டன் மற்றும் எகிப்து நாட்டு போலீசாருடன் பணியாற்றுவார்கள். காசா எல்லைகளைப் பாதுகாக்க இந்தப் படை இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் ஒத்துழைக்கும். இந்த அமைப்பு ஆயுதக் கடத்தல்களைத் தவிர்க்கும்.

பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்துமாறு நெதன்யாகுவுக்கு கண்டனம்
பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்துமாறு நெதன்யாகுவுக்கு கண்டனம்

16. இனி இஸ்ரேல் காசாவை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆக்கிரமிக்காது. இஸ்ரேல் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக காசாவை விட்டு நீங்கும். காசாவில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதியாகும் வரை, இஸ்ரேல் தற்காலிக பாதுகாப்புப் படையை காசாவில் வைத்திருக்கும்.

17. ஹமாஸ் இந்தப் பிளானை மறுத்தாலோ, தாமதப்படுத்தினாலோ, ஏற்கனவே IDF-லிருந்து ISF-க்கு மாற்றப்பட்ட பகுதிகளில் உதவி மற்றும் மறுகட்டமைப்பு இன்னும் முன்னேறும்.

18. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படும். அது சகிப்புத்தன்மை போன்ற இலக்குகளை மையப்படுத்தி இருக்கும்.

19. காசா மறுகட்டமைக்கப்பட்டவுடன், பாலஸ்தீனம் வெற்றிகரமாக சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர், பாலஸ்தீனத்திற்கு நாடு என்கிற அந்தஸ்து வழங்கப்படும்.

20. இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையேயான புதிய உரையாடல்களை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யும்.

இந்த நிபந்தனைகளைச் செயல்படுத்தவும், Gaza International Transitional Authority (GITA) எனும் அமைதி வாரியத்தை மேற்பார்வையிடவும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் டோனி பிளேயரை அதிபர் ட்ரம்ப் நியமித்திருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இது தொடர்பாக அவர் பேசியதில், ``இஸ்ரேல் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது. ஹமாஸும் இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொண்டால், அதற்கு அடுத்து நடக்கவேண்டியவைகளை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் டோனி பிளேயர் மேற்பார்வையிட விரும்புகிறார்.

மேலும், இந்த அமைப்பில் செயல்படவிருக்கும் பிற நாடுகளின் தலைவர்களின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்' எனவும் தெரிவித்திருக்கிறார்.

யார் இந்த சர் டோனி பிளேர்?

மூன்று முறை தொடர்ந்து பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியின் சார்பில் மே 2, 1997 முதல் ஜூன் 27, 2007 வரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் சர் டோனி பிளேர் (Sir Tony Blair). இங்கிலாந்தில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இவரது ஆட்சிக்காலத்தில், வட அயர்லாந்து அமைதி ஒப்பந்தம், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கியது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஈராக் போர்:

சர் டோனி பிளேரைப் பாராட்டும் சர்வதேச நாடுகள், இவர்மீது ஈராக் போர் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றன.

இவரின் பதவிக்காலத்தில், ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் (Weapons of Mass Destruction) இருப்பதாக இவர் கூறிய தகவலால் 2003-ம் ஆண்டு, அமெரிக்கா தலைமையிலான ஈராக் போர் தொடங்கியது.

Sir Tony Blair
Sir Tony Blair

இந்த போர், பல பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் ஈராக்கிய வீரர்களின் உயிரிழப்புகளுக்கும், ஈராக் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை குலைவதற்கும் வழிவகுத்தது.

அதன் பின்னர்தான் சார் டோனி பிளேயர் வழங்கிய தகவல் தவறானது என்பது  நிரூபணமானது. அதனால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

அதைத் தொடர்ந்து சர் டோனி பிளேர், பிரதமர் பதவியை விட்டு விலகினார். பிறகு, 2007 முதல் 2015 வரை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரக் குழுவில் மத்திய கிழக்கு அமைதி தூதராகப் பணியாற்றினார்.

அப்போதுகூட அவர் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பது அவரின் நோக்கமாக இருந்தாலும், அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில்தான் அவரின் அமைதி வாரியத்தை ஒருங்கமைக்கும் இந்தப் பணியும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக அவர் கொண்டிருந்த அனுபவம் மற்றும் வட அயர்லாந்தில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திய அனுபவம், இஸ்ரேல் - காசா விவகாரத்தை மேற்பார்வையிட உதவும் என அமெரிக்கா நம்புகிறது.

இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு

போர் முடிவுக்கான திட்டம் என்ன?

இஸ்ரேல் போர் நீடிப்பதற்கான காரணமாக இஸ்ரேல் சொல்வது பணயக் கைதிகள் விடுவிப்புதான். அதே நேரம் ஹமாஸ் தரப்பில் இஸ்ரேலின் காசா ஆக்கிரமிப்பு.

எனவே இந்த இரண்டு பிரச்னைகளையும் முடிவுக்குக் கொண்டுவர GITA அமைதி வாரியம் திட்டமிட்டிருக்கிறது.

அதன் முதல்படியாக உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளும், இறந்ததாக நம்பப்படும் இருபதுக்கும் மேற்பட்டோரின் உடல்களும் 72 மணி நேரத்திற்குள் இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

பின்னர் இஸ்ரேல் 250 ஆயுள் தண்டனைக் கைதிகளையும், 2023 அக்டோபர் 7 அன்று போர் தொடங்கியதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,700 காசா மக்களையும் விடுவிக்கும்.

அதைத் தொடர்ந்து, பாலஸ்தீன எல்லையில் காத்திருக்கும் முழு உதவியும் உடனடியாக காசாவிற்கு அனுப்பப்படும். பாலஸ்தீனப் போலீசாருக்குப் பாதுகாப்பை ஆதரிக்கவும், பயிற்சி அளிக்கவும் ஒரு பன்னாட்டுப் படை நிறுத்தப்படும்.

இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக காசாவிலிருந்து பின்வாங்கும். இதைச் செயல்படுத்தும் 'GITA அமைதி வாரியம்' என்ற இந்தக் குழுவில் தகுதிவாய்ந்த பாலஸ்தீனியர்களும் சர்வதேச நிபுணர்களும் இருப்பார்கள்.

அதிபர் ட்ரம்ப் - நெதன்யாகு
அதிபர் ட்ரம்ப் - நெதன்யாகு

இந்த புதிய சர்வதேச இடைக்கால அமைப்பின் மேற்பார்வையுடன் அதிபர் ட்ரம்ப் தலைமையில் பிற உறுப்பினர்கள் மற்றும் நாட்டுத் தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

மேலும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலும் ஹமாஸுக்கு காசா நிர்வாகத்தில் எந்தப் பங்கும் இருக்காது.

ஒருவேளை ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு செய்ய வேண்டியதைச் செய்ய தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

சர் டோனி என்ன சொல்கிறார்?

அமைதி வாரியம் என்ற இந்தக் குழு அமைக்கப்பட்டது குறித்துப் பேசிய சர் டோனி, ``அதிபர் டிரம்ப் ஒரு துணிச்சலான மற்றும் புத்திசாலித்தனமான திட்டத்தை வகுத்துள்ளார். இது ஒப்புக்கொள்ளப்பட்டால், போர் முடிவுக்கு வரும். காசாவிற்கு உடனடி நிவாரணத்தை அளிக்கும்.

அதன் மக்களுக்கு பிரகாசமான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்பை வழங்கும். அதே நேரத்தில் இஸ்ரேலின் முழுமையான மற்றும் நீடித்த பாதுகாப்பையும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதையும் உறுதி செய்யும்.

ட்ரம்பின் தலைமை, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்." எனக் குறிப்பிட்டார்.

உதவி ட்ரக்குகளில் இருந்து உணவு பெற்று செல்லும் காசா மக்கள்
உதவி ட்ரக்குகளில் இருந்து உணவு பெற்று செல்லும் காசா மக்கள்

உண்மையான GITA திட்டம் என்ன?

அமெரிக்காவால் நிறுவப்பட்ட 'காசா சர்வதேச இடைக்கால ஆணைய (GITA) குழு' காசா, பாலஸ்தீனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு தற்காலிக, இடைக்கால அரசை உருவாக்கும்.

அவர்கள் மக்களுக்கு அன்றாட சேவைகளை வழங்குவதற்குப் பொறுப்பாவார்கள். பாலஸ்தீன ஆணையம் அதன் சீர்திருத்தத் திட்டத்தை நிறைவு செய்யும் வரை காசாவின் மறுவளர்ச்சிக்கு நிதியளிப்பதற்கான ஒரு கட்டமைப்பையும் இந்த அமைப்பு மேற்கொள்ளும்.

மேலும், கடந்த ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டபடி காசாவுக்கான ஒரு நாளைக்கு சுமார் 600 உதவி லாரிகள் காசாவுக்குள் அனுமதிக்கப்படும். இந்த உதவி ஐக்கிய நாடுகள் சபை, ரெட் கிரசண்ட் மற்றும் இஸ்ரேல் அல்லது ஹமாஸுடன் தொடர்பில்லாத பிற அமைப்புகளால் விநியோகிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

உண்மையில் போர் முடியுமா?

கடந்த வாரம் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது, ​​எகிப்து, இந்தோனேசியா, ஜோர்டான், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் ட்ரம்ப் இந்தத் திட்டத்தை முன்வைத்ததாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

நெதன்யாகு
நெதன்யாகு

ஆனால், கடந்த காலங்களில் இதுபோன்ற போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு தலையசைத்த நெதன்யாகு பல ஒப்பந்தங்களை முறியடித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலில் நெதன்யாகுவின் ஆட்சியின் கூட்டணிக் கட்சிகள் 'நெதன்யாகு போரை முடிவுக்குக் கொண்டுவந்தால் அவரது ஆளும் கூட்டணியை உடைத்துவிடுவோம்' என்று கூறியுள்ளனர்.

எனவே போரை முடிவுக்குக் கொண்டுவர நெதன்யாகு ஒப்புக்கொண்டால், நெதன்யாகு அவர் நாட்டிலேயே கடும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்வார். அதையும் மீறி போர் முடிய வேண்டுமென்றால் நெதன்யாகு மீது அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே, இனி நடக்கப்போவது நாடகமா அல்லது நடவடிக்கையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

கரூர்: ``இறந்தவர்களுக்கு நியாயம்; இருப்பவர்களுக்கு நீதி'' - அருணா ஜெகதீசனுக்கு வைரமுத்து வேண்டுகோள்

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற நீ... மேலும் பார்க்க

காசா விவகாரம்: `இன்னும் 3 - 4 நாள்களில்' - மீண்டும் ஹமாஸை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடங்கிய போரில் இதுவரை காசாவில் 66,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிற... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: ``பேராசையும், அதிகார தாகமும்தான் காரணம்'' - என்ன சொல்கிறார் சந்தோஷ் நாராயணன்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள்,... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.இன்று இதுகுறித்து வீடியோ வெளியிட்ட விஜய், "கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்ல... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விஜய் இன்று (செப் 30) மா... மேலும் பார்க்க

விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!"

கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், 'இரண்டு வா... மேலும் பார்க்க