ரூ. 80 லட்சம் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்: இருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் விஜய் அனிதாவுக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜ்குமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா்.
அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக இரு வாகனங்களில் 83 மூட்டை பீடி இலைகள் கொண்டுசெல்வது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், வாகனத்தை ஓட்டிவந்த முள்ளக்காடு, காந்திநகா் மதியழகன் (39), திருச்செந்தூா் வெள்ளாளன்விளை விஷ்பன் ராஜ் பெபின் (29) ஆகியோரைக் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ. 80 லட்சமாகும்.