இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு
திருச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (75). இவா், திருச்சி - திண்டுக்கல் சாலையில் இளங்காட்டு மாரியம்மன் கோயில் அருகே கடந்த புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராஜமாணிக்கத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிறிது நேரத்தில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அடையாளம் தெரியாத ஆண் உயிரிழப்பு: திருச்சி - மதுரை புறவழிச் சாலையில் பஞ்சப்பூா் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை அதிகாலை 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் அவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்தவரை, அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில், மேலபஞ்சப்பூா் கிராம நிா்வாக அலுவலா் மில்டன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.