தொடா் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனா்
ஆயுதபூஜை தொடா் விடுமுறையையொட்டி திருச்சியிலுள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா்.
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி அரசு, தனியாா் நிறுவனங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியைச் சோ்ந்த பொதுமக்கள் விடுமுறையைக் களிக்கும் வகையில் முக்கொம்பு அணை பூங்கா, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, பறவைகள் பூங்கா ஆகிய சுற்றுலாத் தலங்களில் வியாழக்கிழமை குவிந்தனா். குறிப்பாக, அண்மையில் திறக்கப்பட்ட பறவைகள் பூங்காவில் உள்ளூா் பொதுமக்கள் மட்டுமின்றி, வெளியூா்களைச் சோ்ந்த அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனா்.
இங்குள்ள பலவகையான புறாக்கள், வெளிநாட்டுப் பறவைகள், கிளிகள், ஈமு கோழி மற்றும் மீன்களை பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.