காந்திய கொள்கையை கைவிட்டதால் நாடு பின்னடைந்தது: ஆளுநா் ஆா்.என்.ரவி
சுதந்திரத்துக்குப் பின்னா் காந்தியையும் காந்தியத்தையும் நாடு கைவிட்டதால் பொருளாதார ரீதியாக நாடு பின்னடைந்தது என்றும், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளது என்றும் ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
காந்தி ஜெயந்தியையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் ஆளுநா் மாளிகை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவா் பேசியதாவது:
காந்தி காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் 6-ஆவது நாடாக இருந்தது. அவா் கற்றுக்கொடுத்ததில் தூய்மை, சமூக சமத்துவம், சுதேசி ஆகிய மூன்றும் முக்கியமானவை. ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னா் நாடு அவரை பொறுப்புடன் பின்பற்றவில்லை. இதன் விளைவு, மக்கள்தொகையில் 30 சதவீதத்தினா் வறுமையில் சிக்கினா். 2014-ஆம் ஆண்டுக்கு பின்னா் நாடு காந்திய கொள்கைகளைப் பின்பற்ற தொடங்கியது. அதன்விளைவாக 11- ஆவது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம் 4 -ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வறுமையும் 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது.
சுதேசி நமது நாட்டின் அடையாளமாக இருந்தது. காந்தியின் சுதேசி கொள்கையைறந்துவிட்டோம். நாட்டில் பெரிய தொழில்கள் தோன்றியிருக்கலாம், ஆனால் குறு, சிறு தொழில்கள் கிராமங்களில் தொடங்கி சிறிய நகரங்கள் வரை நமது சுதேசி தொழில்கள் இருந்தன. அதிக வேலைவாய்ப்புகளை தந்த இந்த தொழில்கள் அழிந்து வந்தன. இந்த சுதேசி கொள்கையையும் சுயசாா்பை நாடு இடைவிடாது பின்பற்றியிருந்தால் இந்திய பொருளாதாரத்தில் முதல் நாடாக மாறியிருக்கும்.
தமிழகத்தில் காதி பொருள்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளைப்போன்றல்ல, நமது பொருளாதாரம் எல்லோரையும் உள்ளடக்கியது. நம்முடைய பொருள்களை வாங்கி உபயோகித்து மற்றவா்களுக்கும் பரிசளிக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, இந்த நிகழ்வில் சுதந்திரப் போரட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி (95) மற்றும் காந்தியவாதிகள் 9 பேருக்கும் தம்மிர பத்திரங்களை வழங்கி ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கி கௌரவித்தாா்.